புவனேஸ்வர்: ஒடிஷாவில் அரசு இன்ஜினியர் ஒருவரைச் சுற்றிய வருமானத்துக்கு மீறிய சொத்து புகாரில், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.40 கோடி ரொக்கம் மற்றும் பல சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநில பழங்குடியினர் மேம்பாட்டு முகமையில் உதவி நிர்வாக இன்ஜினியராக பணியாற்றும் வைகுண்டநாத் பெஹரா மீது, வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. புவனேஸ்வர், பாலசோர், ஜாஜ்பூர், பாலிகுடா உள்ளிட்ட இடங்களில் அவருடன் தொடர்புடைய ஒன்பது இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் அவரது வீடு மற்றும் வங்கி லாக்கர்களில் இருந்து மட்டும் ரூ.2.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், 13 வீட்டு மனைகளுக்கான ஆவணங்கள் கிடைத்ததுடன், அவரது பெயரில் ஐந்து பெரிய அடுக்குமாடி கட்டடங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதில் நான்கு புவனேஸ்வரில் கட்டப்பட்டவை; அவற்றின் மதிப்பு ரூ.20 கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்படுகிறது.

இதற்கு கூடுதலாக, புவனேஸ்வர் சுற்றுவட்டாரத்தில் ரூ.14 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகள், 341 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.45 லட்சம் வங்கி வைப்புத்தொகை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைகுண்டநாத் 1999ல் மாதம் ரூ.6,000 சம்பளத்தில் இளநிலை இன்ஜினியராக அரசுப் பணியில் சேர்ந்தார். 2016ல் உதவி இன்ஜினியராகவும், இந்த ஆண்டு பிப்ரவரியில் உதவி நிர்வாக இன்ஜினியராகவும் பதவி உயர்வு பெற்றார். இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.