பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ தீவுப் பகுதியில் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது; 134க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தையடுத்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும், பல இடங்களில் சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சாக்ஸ்சர்ஜென் பகுதியில் மட்டும் 16 பேரும், டாவோ பகுதியில் 3 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். மேலும் 12 பேர் இன்னும் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன; விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.





