மதுரை: கோயில்களுக்கு சொந்தமான தங்கத்தை டெபாசிட் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக வரும் புகார்களை அரசு விசாரிக்கும்; குற்றச்சாட்டு உண்மை எனத் தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் மற்றும் விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆய்வு செய்து வருவதாக கூறினார். நிலுவையில் உள்ள பணிகள் எவ்வளவு, விழாவை எப்படி நடத்துவது என்பதைக் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடைபெறும் என்றார்.
மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழ் முறைப்படி யாகபூஜைகள் நடத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பொதுவாக கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்துவதற்கு தடையில்லை என்றும், முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகள் எங்கு எங்கு உள்ளன என்பதையும் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
முந்தைய ஆட்சிக்காலத்தில் கோயில்களில் பல பிரச்னைகள் இருந்ததாகவும், குறிப்பாக தங்கத்தை டெபாசிட் செய்வதில் முறைகேடு நடந்ததாக புகார் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். டெபாசிட் செய்யும்போது எந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டன, டெபாசிட் செய்யப்பட்ட தங்கம் எப்படி பயன்படுத்தப்பட்டது, அவசரமாக டெபாசிட் செய்தார்களா, நிதிமுறைகேடு நடந்ததா என்பவற்றை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆய்வில் முறைகேடு உறுதி ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.





