சென்னை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பெற்ற நாடாளுமன்ற வெற்றிக்கு திமுக ஆதரவே காரணம் எனக் கூறி, காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக ஆதரவின் மூலம் காங்கிரஸ் “10 எம்.பி.க்களை பெற்றது” எனக் குறிப்பிட்டு, உண்மையில் மானம் இருந்தால் அந்த பதவிகளை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்று காட்ட வேண்டும் என சவால் விடுத்தார்.

தனது அரசியல் பயணம் குறித்தும் சீமான் பேசினார். குறைந்த வயதில் கட்சி தொடங்கியதாக கூறிய அவர், 16 ஆண்டுகளாக போராடி வருவதாகவும், தனது வெற்றியை தள்ளிப் போடலாம்; தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். ஒரு மாதம் தன்னிடம் ஆட்சி இருந்திருந்தால் “ஒருவரும் தூங்க முடியாது” என்றும் அவர் கூறினார்.

முதல்வர் விஜயை குறிவைத்து, தேர்தலுக்கு முன் கூறிய கருத்துகளையும் தேர்தல் முடிவுக்குப் பிந்தைய நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி விமர்சித்தார். சினிமாவில் நடித்ததைத் தவிர மக்கள் தன்னை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கான ஒரு காரணத்தை சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், கரூர் சம்பவம் குறித்து விசாரித்து உண்மை அறிக்கை வெளியிட முதல்வர் விஜய் தயாரா என்றும் கேட்டார்.