ஆட்சியின் நிலைத்தன்மை குறித்து ஸ்டாலின் சந்தேகம்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைமையிலான தற்போதைய ஆட்சி “மூன்று மாதமாவது நீடிக்குமா” என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அப்போது பேசிய ஸ்டாலின், தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் காலத்தில் தான் வேலை அதிகமாக இருக்கும் என்றும், அத்தகைய சூழ்நிலையில் உழைப்பதற்கு தங்கள் கட்சி தயாராக இருப்பதாகவும் கூறினார்.

தற்போதைய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆறு மாதங்கள் வரை இதைப்பற்றி பேசமாட்டேன் என்று முன்பே தெரிவித்திருந்ததாகவும், ஆனால் அதற்கு முன்பே பேச வேண்டிய சூழல் உருவாகுமோ என்ற அச்சம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்துவருவதாகவும் கூறினார்.

ஆறு மாதங்கள் அல்லது ஐந்து மாதங்கள் அல்ல; “மூன்று மாதமாவது ஆட்சி தாங்குமா” என்ற கேள்விக்குறியோடு தான் இன்றைய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.