தமிழக சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என்ற பேச்சு வலுத்துள்ள நிலையில், தமிழக பா.ஜ. தலைவர் பதவியைப் பெற மாநில நிர்வாகிகள் பலர் தீவிரமாக முயற்சிகளைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயினார் நாகேந்திரன் மாற்றப்பட்டால், அவருக்கு மத்திய அமைச்சராக வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனுடன், புதிய மாநிலத் தலைவர் மற்றும் அமைப்பு செயலர் நியமனம் குறித்து கட்சிக்குள் தகவல்கள் பரவி வருகின்றன.

மாநிலத் தலைவர் பதவிக்காக ராம் சீனிவாசன், அர்ஜுன மூர்த்தி, ஏ.பி. முருகானந்தம், வினோஜ் செல்வம் உள்ளிட்ட பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பா.ஜ.யிலிருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘இது நம்ம இயக்கம்’ என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ள சூழலில், தலைவர் மாற்றம் செய்தால் அதிருப்தியாளர்கள் அண்ணாமலை பக்கம் செல்லக்கூடும் என்ற அச்சத்தால் தேசிய தலைமையகம் அவசர முடிவைத் தவிர்க்கும் நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், நயினார் நாகேந்திரன் தனது பதவியைத் தக்கவைக்க மாநில நிர்வாகத்தில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இன்று திருச்சியில் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை அவர் கூட்டியுள்ள நிலையில், நிர்வாகிகள் மாற்றம் மற்றும் அண்ணாமலை பக்கம் செல்லும் போக்கைத் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.