திருச்சி கிழக்கு உட்பட தமிழக சட்டசபையின் ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆரம்ப முன்னேற்பாடுகளில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு தொகுதிகளில் சமீபத்திய சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வென்ற எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பின் ராஜினாமா செய்து, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கட்சியில் இணைந்ததால் அந்த இடங்கள் காலியாகின.

மேலும், முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்த தொகுதியும் காலியாகி, மொத்தம் ஐந்து இடங்கள் காலியாக உள்ளன.

காலியாக உள்ள தொகுதிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டிய நிலையில், தேர்தல் கமிஷன் முன்னேற்பாடுகளை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக டில்லியில் உள்ள தேர்தல் கமிஷனர்களுடன் ஆலோசிக்க தமிழக தேர்தல் அதிகாரிகள் இந்த வாரம் டில்லி செல்ல உள்ளதாகவும், ஜூலையில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தல் முடிந்து ஓராண்டுக்குள் ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது தமிழகத்தில் முதல் முறை என கூறப்படுவதால் அரசியல் சூழல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற த.வெ.க. தலைமையகம் வியூகங்களை வகுத்து வருவதாகவும், ஐந்து தொகுதிகளிலும் மக்கள் பிரச்னைகள் தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.