மின்துறையில் முதல்கட்டமாக 15,000 பேரை விரைவில் புதிதாக பணியில் அமர்த்த உள்ளதாக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய சூழலில் மின்துறையில் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், மொத்தமாக சுமார் 70,000 பணியாளர் பற்றாக்குறை உள்ளதாகவும் கூறினார். இதை கருத்தில் கொண்டு முதல் கட்ட நியமனத்திற்கான தேர்வு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார். சமீபத்தில் 300 உதவி பொறியாளர்கள் செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றதாகவும், இது சுமார் 15 ஆண்டுகளாக காத்திருந்த நிலுவை பதவி உயர்வாகும் என்றும் விளக்கினார்.
கோர்ட் ஆணை கிடைத்த பின்னரும் சிலருக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்ததாகவும், அது கவனத்துக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுத்து பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். மின்சார வாரியத்தை சீரமைக்கும் பணிகளுடன், ஊழியர்களின் நிலுவை கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு அடுத்தடுத்த கட்டங்களில் மேலும் பதவி உயர்வுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.





