திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான சுகேந்து சேகர் ரே, தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணமுல் கட்சி கடுமையான தோல்வியை சந்தித்ததையடுத்து கட்சிக்குள் மோதல் நிலவி வருவதாகவும், அதன் பின்னணியில் பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருவதாகவும் செய்தி கூறுகிறது.

தன் ராஜினாமா கடிதத்தில், சமீபத்திய தேர்தலில் பாஜவுக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்ததாக ரே குறிப்பிட்டார். இதற்கு காரணமாக, மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால ஆட்சியால் ஏற்பட்ட அதிருப்தி என கூறி, கட்டுக்கடங்காத ஊழல், பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள், சட்டம்-ஒழுங்கு மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட தோல்விகளை சுட்டிக்காட்டினார்.

மேலும், மேற்கு வங்கத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல புதிய அரசு பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, ராஜ்யசபா எம்பி பதவியிலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலும் இருந்து விலகுவதாக அவர் கூறினார்.