தி.மு.க., அ.தி.மு.க. பாணியில் மாவட்ட வாரியாக ‘பொறுப்பு அமைச்சர்கள்’ நியமனத்தை த.வெ.க. அறிவித்து தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது. திருப்பூருக்கு அமைச்சர் அருண்ராஜ், நீலகிரிக்கு அமைச்சர் கமலி என செய்யப்பட்ட நியமனங்கள் அரசியல் மட்டுமல்ல, நிர்வாக ரீதியிலும் கவனத்தை ஈர்த்துள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டிய பொறுப்பு அருண்ராஜ் மீது உள்ளது. கோடிக்கணக்கில் அன்னியச் செலாவணியை ஈட்டும் மாவட்டமாக இருந்தாலும், மோசமான சாலைகள், போக்குவரத்து நெரிசல், குப்பை மேலாண்மை குறைபாடுகள், ஆமை வேக அரசு இயந்திரம் போன்ற உட்கட்டமைப்பு சிக்கல்களை நவீனமயமாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது.
அரசியல் ரீதியாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக உள்ள நான்கு முனை போட்டி சூழலில் த.வெ.க. ஆதரவு அலையை உருவாக்குவது பெரிய சவாலாகும். மேலும், உள்ளூர் அமைச்சரையே நியமிக்கும் வழக்கத்தை மாற்றி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்ராஜ் நியமிக்கப்பட்டதால், அவரை அணுகுவதில் நடைமுறைச் சிக்கல் இருக்கலாம் என்ற முணுமுணுப்பும் எழுந்துள்ளது. கோரிக்கைகளை எளிதாக கொண்டு செல்ல திருப்பூரில் தனி அலுவலகம் அமைக்க வேண்டும் என உள்ளூர் அமைப்புகள் எதிர்பார்க்கின்றன.
நீலகிரியில் கமலி நியமனம் அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது; கொங்கு மண்டலத்தை மூத்த தலைவர் செங்கோட்டையன் கவனித்து வந்ததாக கூறப்படும் நிலையில் இந்த மாற்றம் கவனிக்கப்படுகிறது. இதுவரை தி.மு.க.-காங்கிரஸ் கோட்டையாக பார்க்கப்படும் மலைப்பகுதிகளில் த.வெ.க. செல்வாக்கை உயர்த்துவது, சமவெளித் தொகுதிகளில் கிடைத்த ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வது ஆகியவை அவருக்கான முக்கிய பணிகளாக குறிப்பிடப்படுகிறது.
அதே நேரத்தில், நீலகிரியில் அனுமதியற்ற கட்டட விவகாரம், சிதைந்த உட்கட்டமைப்பு போன்ற நிர்வாகப் பிரச்னைகளையும் சரி செய்ய வேண்டிய பொறுப்பும் கமலிக்கு உள்ளது. அவிநாசி தொகுதியிலிருந்து இதுவரை யாரும் அமைச்சரானதில்லை என்ற வரலாற்றை கமலி உடைத்துள்ளதால், அன்னூர், மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் அதன் அரசியல் எதிரொலி எப்படி இருக்கும் என்பதும் கவனிக்கப்படுகிறது.





