உலகம் முழுவதும் பயணத்தின் நடுவே கப்பல்கள் கைவிடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், கடலில் சிக்கி உதவியின்றி தவிக்கும் மாலுமிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதில் இந்திய மாலுமிகளே அதிகமாக பாதிக்கப்படுவதாக லண்டனை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு (ITF) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 410 கப்பல்கள் மற்றும் அவற்றில் இருந்த 6,223 மாலுமிகள் கைவிடப்பட்டதாக ITF கூறியது. நிறுவனங்கள் நஷ்டமடையும் சூழல் அல்லது கப்பல் உரிமையாளர்கள் சட்டவிரோத செயல்களில் கைது செய்யப்படும் நிலை போன்ற காரணங்களால், கப்பல்கள் நடுக்கடலில் அப்படியே விடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைவிடப்பட்டவர்களில் இந்தியர்களே அதிகம் எனவும், கடந்த ஆண்டு மட்டும் 1,125 இந்திய மாலுமிகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 32% அதிகம். பிலிப்பைன்ஸ், சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிற்கு அதிக மாலுமிகளை வழங்கும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருப்பதால், இந்த தகவல் கடல்சார் துறையில் கவனம் பெற்றுள்ளது.
சமீபத்திய உதாரணமாக, மங்கோலிய கொடியுடன் சென்ற ‘அஸ்ரா சி’ என்ற சரக்கு கப்பல் துருக்கியின் இஸ்தான்புல் கடல் பகுதியில் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் இருந்த 4 இந்திய மாலுமிகள், உரிமையாளர்கள் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து, 10 மாதங்கள் பசி மற்றும் துன்பத்தில் தவித்த பின்னர் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.
இதன் பின்னணியில், மாலுமிகளை தொடர்ந்து ஏமாற்றும் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும் கப்பல்களை மத்திய அரசு கருப்புப் பட்டியலில் சேர்த்து வருவதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





