புதுடில்லி: அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பின்னர் தவெகவில் இணைந்த நான்கு பேர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் பின்னர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், இந்த நால்வர் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், இடைத்தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கிடையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அதிமுக அளித்த மனு தொடர்பான விசாரணை முடிவில் சபாநாயகர் இன்று தீர்ப்பளித்து, நால்வர் மீதும் அந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடர்ந்தால், நடப்பு சட்டசபையின் மீதமுள்ள பதவிக்காலத்தில் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகலாம். இந்தச் சூழலில், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி அவர்கள் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.





