சென்னை: தவெக அரசு நன்றாக செயல்பட்டு வருகிறது; பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன; ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
முதல்வர் விஜயை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், கவர்னர் உரையில் இதுகுறித்து அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக கூறினார். தவெக தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தவெக அரசு பொறுப்பேற்று நாளையுடன் ஒரு மாதம் நிறைவடைவதாக கூறிய அன்புமணி, இன்னும் 2–3 மாதங்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றார். பல இடங்களில் ஊழல் குறைந்துள்ளதாக கூறிய அவர், அதிகாரிகள் மனநிலை இன்னும் மாறவில்லை; அதற்கு மேலும் நேரம் தேவைப்படலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் புதிய மின்திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை என்றும், தற்போதைய மின்வெட்டுக்கு திமுகவே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேகதாது தமிழ்நாட்டின் உயிர்நாடி என கூறிய அவர், இத்தகைய பிரச்னைகள் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துமாறு முதல்வரிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.





