சென்னை: மருத்துவப் புத்தகங்களைப் படிப்பது போலவே தினசரி செய்தித்தாள்களையும் படிப்பது அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் மருத்துவ மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சென்னையில் கலைவானர் அரங்கத்தில் நடைபெற்ற சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி.) 190வது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களுக்கான இணையதளம் (alumnimmc.com) தொடங்கி வைக்கப்பட்டதுடன், முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில் தனது பெயரையும் அவர் பதிவு செய்தார்.
தன் பாதையை தெளிவாகத் தேர்ந்தெடுத்து பயணித்தால் வெற்றி பெற முடியும் என கூறிய அமைச்சர், மக்களுக்கு சேவை செய்வேன் என்றும் தெரிவித்தார். மேலும், மருத்துவப் படிப்பு மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள எம்.எம்.சி. டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவர் என்றார்.
மருத்துவ மாணவர்களுக்கான விளையாட்டு கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றும், வாழ்க்கை புத்தகங்களால் மட்டுமே நிரம்பியதாக இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். சமூக வலைதளங்களில் முடங்கி விடாமல், தினசரி செய்தித்தாள்களையும் பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கல்லூரியின் பாதுகாப்பான சூழலைத் தாண்டி இனி சவால்கள் இருக்கும்; நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். வெளிநாடுகளில் பணியாற்றும் தமிழக டாக்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.





