உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 17 அம்ருதவித்யாலயம் பள்ளி வளாகங்களில் தேனீக்களுக்கு உகந்த தாவரங்களை நடும் மாணவர் தலைமையிலான இயக்கத்தை அயுத் தமிழகம்–புதுச்சேரி ஒருங்கிணைத்தது.
உலகளாவிய “Now for Climate” பிரசாரச் செய்திக்கு இணங்க நடத்தப்பட்ட இந்த முயற்சி, மகரந்தச்சேர்க்கையாளர்கள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் காலநிலை தொடர்பான விழிப்புணர்வை மாணவர்களிடையே மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்து மாணவர்கள் கற்றுக்கொள்ளும் வகையில் கற்றல் இடங்களை உருவாக்குவதும் முக்கிய இலக்காக இருப்பதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளி வளாகங்களுக்குள் உள்நாட்டுத் தேனீக்களுக்கு ஏற்ற தாவர இனங்கள் நடப்பட்டன. இந்த பசுமை இயக்கம் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் பக்கத்தில் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டது.
பல்வேறு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், ஈரோடு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பி.மேகலா, நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் ரேஷ்மி என் நாயர், கன்னியாகுமரி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் வி.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடப்பட்ட மரக்கன்றுகளில் வேம்பு, வாழை, புங்கம், புளி, முருங்கை, நாட்டு இலந்தை, மா, நாவல் போன்ற பழம் தரும் இனங்களும்; கொன்றை, மகிழம், இலுப்பை, இலவம், கடம்பு, பூவரசு, ஏழிலைப்பாலை போன்ற பூக்கும் மரங்களும் இடம்பெற்றன. மேலும் கனகாம்பரம், எருக்கன், அசெரோலா, மஞ்சள் அலரி போன்ற ஆண்டு முழுவதும் பூக்கும் வகைகளும் நடப்பட்டன; இவை தேனீக்கள், உள்நாட்டு கொசுவாட்டித் தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், பறவைகள் ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பதோடு மண்ணின் ஆரோக்கியத்திற்கும் உதவும் என அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.




