புதுடில்லி: இந்த ஆண்டின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மறுமதிப்பீடு உள்ளிட்ட தேர்வுக்குப் பிந்தைய சேவைகளுக்கு 1.6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை 18 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியதாகவும், விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் கணினித் திரை வழி மதிப்பீட்டு முறையில் திருத்தப்பட்டதாகவும் வாரியம் கூறியது.
முடிவுகள் வெளியான பிறகு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் முறையீடுகள் எழுந்தன. இதையடுத்து, திருத்தப்பட்ட விடைத்தாள்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மறுமதிப்பீடு தொடர்பான கோரிக்கைகளை சமர்ப்பிக்க பிரத்யேக இணையப் பக்கத்தை சி.பி.எஸ்.இ. ஏற்படுத்தியது.
இதற்கிடையில், சிலரின் பதிவு எண்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும், பதிவேற்றப்பட்ட விடைத்தாள்கள் தெளிவாக இல்லை அல்லது தங்களுடையது போல இல்லை என்றும் சில மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 2 முதல் 7 வரை தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஐ.ஐ.டி. குழுவினரின் மேற்பார்வையில் இணையதளம் சிறப்பாக செயல்பட்டதாக சி.பி.எஸ்.இ. கூறியது.
அந்த காலகட்டத்தில் 1.6 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், 3.8 லட்சத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் தொடர்பான கோரிக்கைகளை வெற்றிகரமாக சமர்ப்பித்ததாகவும் வாரியம் தெரிவித்தது.





