புதுடில்லி: இந்தியர்களை குறிவைத்து கம்போடியாவில் இருந்து செயல்பட்டதாக கூறப்படும் சைபர் மோசடி வலையமைப்பில், ஆயிரக்கணக்கான இந்திய சிம் கார்டுகள் வாங்கி வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தை அமலாக்கத் துறை (ED) விசாரித்து வருகிறது.
அமலாக்கத் துறை தகவலின்படி, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஜூன் 5-ம் தேதி நடந்த சோதனையில் சைபர் மோசடி தொடர்பான பணப் பரிவர்த்தனை தடயமாக உள்ளூரில் சுமார் 30 வங்கி கணக்குகள் செயல்பட்டது தெரிய வந்தது. இதே நேரத்தில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சைபர் கிரைம் போலீசார் அதிக அளவில் சிம் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டதை சந்தேகித்து வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து ராஜஸ்தானில் ஏழு இடங்களில் சோதனை நடத்தியது.
அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில், சந்தேகத்துக்கிடமான 2.3 லட்சம் சிம் கார்டுகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதில் 36,000 சிம் கார்டுகள் கம்போடியாவில் செயலில் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அவற்றில் 5,300 சிம் கார்டுகள் மூலம் வாட்ஸ்அப் அழைப்புகள் செய்து இந்தியர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல், ஜியோ, வோடஃபோன்-ஐடியா ஆகிய நிறுவனங்களின் சில முகவர்கள் இதில் தொடர்புடையதாகவும், கல்வியறிவு குறைந்த வாடிக்கையாளர்களை தேர்வு செய்து ‘சிம் போர்டிங்’ அல்லது புதிய சிம் வழங்குவதாக கூறி கைரேகை மற்றும் ஆவணங்களை பெற்றதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக ED கூறுகிறது.
பின்னர் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அதே ஆவணங்களை பயன்படுத்தி கூடுதலாக பல சிம் கார்டுகளை ‘ஆக்டிவேட்’ செய்து, இடைத்தரகர் மூலம் கமிஷன் பெறும் வகையில் மலேஷியா தொடர்புடைய மோசடி நபரிடம் ஒப்படைத்ததாகவும், அதன் மூலம் கம்போடியாவில் இருந்து மோசடி வலையமைப்பு செயல்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





