டெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் நேற்று பரஸ்பரம் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மேற்காசியாவில் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் உருவான நிலையில், மாலையில் இரு தரப்பும் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போர் 100 நாட்களை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் பல நாடுகளில் பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப். 8-ம் தேதி ஈரான் மற்றும் அமெரிக்கா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தாலும், நிரந்தர முடிவுக்கான முயற்சிகளுக்கிடையே இடையிடையே தாக்குதல்கள் தொடர்ந்தன. லெபனானில் செயல்படும் ஹெஸ்பொல்லா நிலைகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் குறிவைப்பதும் நடந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்திய பதற்றத்தில், பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் உள்ள ஹெஸ்பொல்லா நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தகவல். இதற்கு பதிலடியாக, ஈரான் தனது நாட்டிலிருந்து இஸ்ரேலின் ராணுவ இலக்குகளை நோக்கி 10-க்கும் மேற்பட்ட அதிநவீன ஏவுகணைகளை ஏவியதாகவும், அவற்றை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து அழித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்று அதிகாலை இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்து பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தியதாகவும், ஈரானின் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பெட்ரோலிய ஆலைகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தியதுடன், தனது முயற்சியால் போர் நிறுத்த முடிவு ஏற்பட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.





