தர்கா ஒன்று இருப்பது மட்டுமே காரணமாக, அந்த நிலம் தானாகவே வக்ப் சொத்தாக மாறாது; அதனால் தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடவும் முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ‘சர்கார் சையத் ஹபீபுல்லா ஷா காதரி ஆரிப் ரப்பானி ஹசரத் தர்கா’ தொடர்பானது. தர்காவுக்கு முத்தவல்லியை நியமித்த வக்ப் வாரிய தீர்மானத்தையும், வக்ப் சட்டத்தின் கீழ் தர்காவை பதிவு செய்ய உத்தரவிட்டதையும் எதிர்த்து, தர்கா தரப்பில் தமிழ்நாடு வக்ப் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, தர்கா நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கு நீதிபதி திலகவதி முன் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு, எந்த சொத்தையும் வக்ப் சொத்தாக அறிவிப்பதற்கு முன் சட்டப்பூர்வமான கணக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், அந்த சொத்து வக்ப் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கோ அல்லது அரசிதழில் வெளியிடப்பட்டதற்கோ ஆதாரம் இல்லை எனக் கூறி, வக்ப் வாரிய உத்தரவுகளை ரத்து செய்தது.
சட்டப்படி வக்ப் என நிறுவப்படாதோ அல்லது அங்கீகரிக்கப்படாதோ இருக்கும் நிலையில், வெறும் தர்கா இருப்பதாலேயே வக்ப் வாரியத்திற்கு அதிகாரம் வந்துவிடாது என்றும், ஒவ்வொரு கல்லறையும் அல்லது தர்காவும் தானாகவே வக்ப் சொத்தாக மாறாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.





