புதுடில்லி: வரவுள்ள நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்கள் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி கொண்டு செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த சம்பவம் தேர்வர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜூன் 21 அன்று மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்த முறை எந்த குளறுபடியும் ஏற்படாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, விமானப்படை ஹெலிகாப்டர்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தார். அதன் அடிப்படையில், சீல் செய்யப்பட்ட வினாத்தாள்கள் விமானப்படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டர்களில் பிராந்திய மையங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.

வினாத்தாள்கள் உள்ளிட்ட தேர்வுப் பொருட்கள் பாதுகாப்பாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குள் சேரும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதன் மூலம் வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் தெரிவித்தனர்.