இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், உயிரியல்-கணிதப் பிரிவு மாணவர்கள் பலர் மருத்துவம்–பொறியியல் என்ற இரு தேர்வுகளுக்கிடையில் குழப்பத்தில் உள்ளனர். இதே நேரத்தில் ஜே.இ.இ. மெயின் மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் முடிந்து, மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.
உயிரியல் மற்றும் கணிதம் இரண்டையும் படிக்கும் மாணவர்கள் வழக்கமாக நீட், ஜே.இ.இ. ஆகிய இரு தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கும் தயாராகிறார்கள். இவர்களில் பலருக்கும் முதன்மை இலக்கு மருத்துவம்; அது கிடைக்காதபட்சத்தில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற முன்னணி நிறுவனங்களில் பொறியியல் படிப்பை தேர்வு செய்வது வழக்கம்.
நாடு முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் பேர் ஜே.இ.இ. தேர்வு எழுதுகின்றனர்; இதில் 20–25% வரை உயிரியல்-கணித மாணவர்கள் என கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 40,000 மாணவர்கள் நீட் மற்றும் ஜே.இ.இ. இரண்டுக்கும் பயிற்சி பெறுவதாக தகவல்.
இந்த ஆண்டு நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. அதேசமயம் ஜே.இ.இ. கவுன்சிலிங் ஜூன் 2 முதல் தொடங்கியுள்ள நிலையில், முதல் சுற்று சீட் ஒதுக்கீடு ஜூன் 15ல் வெளியாக உள்ளது.
இதனால் மாணவர்கள் “மருத்துவத்துக்காக காத்திருக்கலாமா, அல்லது பொறியியல் சீட்டை உறுதி செய்துவிடலாமா” என்ற தயக்கத்தில் உள்ளனர் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஐ.ஐ.டி./என்.ஐ.டி. போன்ற இடங்களில் சீட் உறுதி செய்தால் சேர்க்கை முன்பணமாக ரூ.2 லட்சம் வரை உடனடியாக செலுத்த வேண்டிய சூழல் இருக்கலாம்; பின்னர் நீட் முடிவுகள் வந்தபின் மருத்துவ சேர்க்கை கிடைத்தால், ஏற்கனவே உறுதி செய்த பொறியியல் இடத்தை ரத்து செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும், முன்பணம் முழுமையாக திரும்பக் கிடைக்காமல் போகும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கூறினர். இதை கருத்தில் கொண்டு, மருத்துவத்துக்காக விலகும் மாணவர்களுக்கு முன்பணம் முழுமையாக கிடைக்கவும், காலியாகும் இடங்களை மீண்டும் நிரப்பவும் இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழக பொறியியல் கவுன்சிலிங் தொடங்கும்போதும் இதே பிரச்னை வரக்கூடும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.





