புதுடில்லி: வாடகைக்கு விடப்பட்ட இடத்தில் செயல்படும் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் விதிமீறல்களுக்கு, அந்த கட்டடத்தின் உரிமையாளரை பொறுப்பாக்க முடியாது என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT) முடிவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில், ஜக்மோகன் லச்சிராம் ஜலான் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் 2020ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தின் சாயப்பட்டறை தொழிற்சாலை இயங்கியது. உரிமம் பெறாமலும், விதிமுறைகளை பின்பற்றாமலும் செயல்பட்டதாகக் கூறி, குஜராத் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அந்த ஆண்டே தொழிற்சாலையை மூட உத்தரவிட்டது.

அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் அனுமதிக்கப்பட்ட அளவை மீறியதாகக் கூறி, உரிமையாளரான ஜலானுக்கு ரூ.25 லட்சம் சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்கப்பட்டது. இடம் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டதாகவும், உரிமம் இல்லாமல் தொழிற்சாலை இயங்கியது தெரியாது என்றும் அவர் வாதிட்டார்.

இருப்பினும், இழப்பீட்டை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். உயர் நீதிமன்றத்தின் மறுபரிசீலனை உத்தரவுக்குப் பிறகும், 2024ல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அபராதத் தொகையை உறுதி செய்ததால், ஜலான் NGT-யை அணுகினார்.

கடந்த ஆண்டு நவம்பரில், வாடகை இடத்தில் இயங்கிய தொழிற்சாலை செய்த விதிமீறல்களுக்காக உரிமையாளர் ரூ.25 லட்சம் இடைக்கால சுற்றுச்சூழல் இழப்பீட்டை செலுத்த வேண்டியதில்லை என NGT தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் சஞ்சீவ் சச்தேவா அமர்வு NGT முடிவை உறுதி செய்து, வாடகைதாரர் செய்த சுற்றுச்சூழல் விதிமீறல்களுக்கு கட்டட உரிமையாளரை பொறுப்பாக்க முடியாது எனத் தெரிவித்தது.