மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12 ஆண்டுகளாக ஒருநாள் கூட ஓய்வெடுக்காமல் தேசத்திற்கும் மக்களுக்கும் சேவையாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நாளை முன்னிட்டு அவர் சமூக வலைதளத்தில் இதை பதிவிட்டார்.

மோடியின் தலைமையில் ஏழைகளின் நலத்திட்டங்களும் “முன்னெப்போதும் இல்லாத” வளர்ச்சியும் ஒரே நேரத்தில் சாத்தியமானதாக நாடு கண்டதாக அமித் ஷா கூறினார். 80 கோடி மக்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்குதல், நாடு முழுவதும் 90க்கும் மேற்பட்ட விமான நிலையங்களைத் தொடங்கி வைப்பது, 140க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்களை இயக்கத் தொடங்கியது போன்றவற்றை அவர் குறிப்பிட்டார்.

மேலும் 4 கோடிக்கும் அதிகமான ஏழைக்குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்குதல், 1.45 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் மற்றும் 3,000 கி.மீ நவீன விரைவுச் சாலைகள் அமைத்தல், 50 கோடி மக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு, 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகள் ஆகியவற்றையும் அவர் பட்டியலிட்டார். இத்தகைய முயற்சிகள் இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்ற உதவியதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கடந்த 12 ஆண்டுகளில் வெளியுறவு அமைச்சகமும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளதாக தெரிவித்தார். குறைகளைத் தீர்ப்பதற்கும் கருத்துக்களைப் பெறுவதற்கும் டிஜிட்டல் தளங்கள் உருவாக்கப்பட்டதாகவும், உக்ரைன், இஸ்ரேல், ஆப்கானிஸ்தான், சூடான் மோதல்கள் போன்ற நெருக்கடிகளில் திறம்படப் பதிலளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், இந்தியக் கலாசாரம் வெளிநாடுகளில் ஊக்குவிக்கப்பட்டதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். மேலும் வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் பயணிக்கும் இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 44 தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய ராஜதந்திரம் நாட்டிற்காக 24 மணி நேரமும் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.