கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் சைபர் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாகியுள்ள நிலையில், அந்த வலையங்கள் புதிய தளமாக இலங்கையைத் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு வேலை எனக் கூறி இந்திய இளைஞர்களை அழைத்து சென்று ஏமாற்றிய சம்பவங்களும் குறிப்பிடப்படுகின்றன. அங்கு சென்றவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களை சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு பலரை மீட்டு தாயகம் அழைத்து வந்துள்ளது.

அமெரிக்க பார்லிமென்ட் குழு கடந்தாண்டு வெளியிட்ட அறிக்கையில், பல நாடுகளின் அழுத்தம் அதிகரிக்கும் போது மோசடி குழுக்கள் பலவீனமான விசாரணை அமைப்புகள் இருந்தாலும் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பு கொண்ட நாடுகளுக்கு இடம்பெயர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் விசா இல்லாத பயணம், வாடகைக்கு எளிதில் கிடைக்கும் கட்டட வசதி, வலுவான தொலைத்தொடர்பு இணைப்பு, அறியப்பட்ட பணபரிமாற்ற வழிகள் மற்றும் சிம்கார்டுகள் எளிதில் கிடைப்பது போன்ற காரணங்கள் மோசடியாளர்களுக்கு சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

கொழும்பு மற்றும் கடற்கரை சுற்றுலா பகுதிகளில் சுற்றுலா பயணிகள் போல வந்து வீடுகளை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்தாண்டு மட்டும் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஏப்ரலில் நடந்த சோதனையில் 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும், பின்னர் கொழும்பில் மேலும் 120 வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கைது நடவடிக்கைகள் தீவிரமானதும், வீடுகளைத் தவிர்த்து ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலக கட்டடங்களுக்கு மோசடியாளர்கள் இடம்பெயர்வதாகவும், இவை வாடகைக்கு எளிதில் கிடைப்பதுடன் விரைவாக தப்பிச் செல்ல உதவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் பல சீனர்கள் இருப்பதாகவும், இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் இந்த கைது விவரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மோசடிகளை கட்டுப்படுத்த பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியாவிடம் இலங்கை உதவி கோரியுள்ள நிலையில், விசாரணை அமைப்புகளுடன் இணைந்து நிதி புலனாய்வு படையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.