திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதற்கான இறுதி முடிவை முதல்வர் விஜய் எடுப்பார் என்று ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு வந்த அமைச்சர், கொடைக்கானல் சாலை சந்திப்பில் அலங்கார நுழைவாயிலும், கிரிவீதியில் உள்ள “ராக்கால நந்தவனம்” பகுதியையும் பழநி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரவிமனோகரனுடன் இணைந்து திறந்து வைத்தார்.

திறப்பு விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர்களில் எம்.எல்.ஏ. பெயரும் படமும் இடம்பெறவில்லை என அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர், எம்.எல்.ஏ.விடம் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் ரோப்கார் மூலம் கோயிலுக்கு சென்ற அமைச்சர், பொது தரிசன வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தார். அன்னதானக் கூடத்திலும் பக்தர்களுடன் வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து அன்னதானம் உண்டார். தொடர்ந்து அடிவாரத்திற்கு திரும்பி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், கோயிலில் நடைபெறும் கட்டுமான பணிகள், அன்னதானத்தின் தரம், பஞ்சாமிர்தம் தயாரிப்பு உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டதாக கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் கோயில் செயல்பாடுகள் வியாபார நோக்கில் நடந்ததாகவும், அதை மாற்றி பக்தர்களுக்கு பயனுள்ளதாக நடவடிக்கைகள் எடுக்க ஆய்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் முடிவை முதல்வரே எடுப்பார் என்றும், துறை நிர்வாகத்தை கவனிப்பதே தன் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.