மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பான துரை வைகோவின் யோசனையை முதல்வர் விஜய் ஏற்கவில்லை என த.வெ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மதிமுக நான்கு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, இரு தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு, தனிச்சின்னத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அணி மாறியதாகவும், இதில் காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக் அமைச்சரவையிலும் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டது குறித்து துரை வைகோ தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து அவர் திருச்சியில் முதல்வர் விஜயை சந்தித்ததாகவும், ஜூன் 4-ம் தேதி முதல்வரின் இல்லத்திலும் பேசினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வட்டாரங்களின் தகவலின்படி, அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த துரை வைகோ, “நீங்கள் சொன்னால் எங்கள் இரு எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைத்து தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி, உங்கள் கூட்டணிக்குள் வந்து, இணைந்து இடைத்தேர்தலை சந்திக்கலாம்” என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தி.மு.க. சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைப்பது ‘குதிரை பேரம்’ என்ற விமர்சனத்தை மேலும் தீவிரப்படுத்தி, இடைத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் விஜய் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

அதே நேரத்தில், கூடுதல் தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திப்பது த.வெ.க.க்கு சாதகமாக இருக்கலாம் என அதன் அரசியல் வியூக வகுப்பாளர்கள் கருதுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.