புதுடில்லி: பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் கொள்கைகள் சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு “வழிகாட்டும் ஒளி” என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பிர்சா முண்டாவின் நினைவு தினத்தை முன்னிட்டு டில்லியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், முண்டாவின் தியாகமும் சிந்தனைகளும் நாட்டின் அதிகாரமளித்தல் மற்றும் கண்ணியப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாக கூறினார்.
1900ஆம் ஆண்டு இதே நாளில் பிர்சா முண்டா வீரமரணம் அடைந்ததாகவும், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்குடியினப் போராட்டத்திற்கு அவர் தலைமை வகித்ததாகவும் ராதாகிருஷ்ணன் நினைவூட்டினார். தைரியம், சுயமரியாதை, சமூக நீதிக்கான அர்ப்பணிப்பு ஆகியவை அவரது அடையாளமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
உல்குலன் எனப்படும் முக்கியமான போராட்டத்தின் மூலம் ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு உணர்வை அவர் தட்டி எழுப்பியதாகவும், பழங்குடியினர் தங்கள் உரிமைகள், அடையாளம், கண்ணியத்தைப் பாதுகாக்கத் தூண்டியதாகவும் துணை ஜனாதிபதி தெரிவித்தார். ஜார்க்கண்ட் கவர்னராக பதவியேற்ற நாளிலும், துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகும், பிர்சா முண்டா பிறந்த இடமான உலிஹாட்டுவில் அவருக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிர்சா முண்டாவின் தியாகமும் கொள்கைகளும் சமூக நீதி, அதிகாரமளித்தல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய நாட்டின் இலக்குகளுக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும், எதிர்கால தலைமுறைகளுக்கு அவரது சிந்தனைகள் உத்வேகமாகத் தொடரும் என்றும் அவர் கூறினார்.





