இமயமலையின் கடினமான மலைப்பகுதியில் அமைக்கப்படும் சோஜிலா சுரங்கப்பாதை திட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயரமான மலைப்பகுதியில் கட்டப்படும் உலகின் மிக நீளமான ஒற்றைக் குழாய் இருவழிச் சாலை சுரங்கப்பாதை என்ற பெருமை இதற்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கையும் லடாக் பகுதியையும் இணைக்கும் இந்த சுரங்கப்பாதை, ஒற்றைக் குழாய்க்குள் இரு திசைகளிலும் வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 13.15 கி.மீ முதல் 14.2 கி.மீ வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நிருபர்களிடம் பேசுகையில், இது அதிநவீன தொழில்நுட்பத்துடன் உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்புத் தரநிலைகளில் கட்டப்படுவதாக கூறினார். லே மற்றும் லடாக் பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் தடையற்ற போக்குவரத்தை இது உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக லடாக்கிற்கு சென்றபோது, ஆண்டுக்கு சுமார் ஆறு மாதங்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுவதாக தன்னிடம் கூறியதாக கட்கரி நினைவுகூரினார். 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதையடுத்து இந்த திட்டம் தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், திட்டத்தின் ஆரம்ப ஒப்பந்த மதிப்பு ரூ.12,000 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.7,000 கோடியில் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இதன் மூலம் குறைந்தது ரூ.5,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது வெறும் சுரங்கப்பாதை அல்ல; இப்பகுதியின் வாழ்வாதாரத்தையும் இணைக்கும் முக்கியப் பாதை என்றும் அவர் கூறினார்.