சட்டசபை தேர்தலுக்கு முன் வேட்பாளர் தேர்வின் போது தலைமையிடம் வழங்கிய நிதி முழுமையாக திரும்பவில்லை என அதிமுக வேட்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளதாக, கட்சியின் சில நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், கூட்டணி கட்சிகளுக்கு இடம் போக 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்ட நிலையில், தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தலைமையின் நெருங்கிய உறவினர்கள் வழியாக வேட்பாளர் தேர்வு நடவடிக்கைகள் தொடங்கின. சீட் கேட்பவர்கள் தேர்தல் செலவை சமாளிக்க முடிகிறதா என்பதை அறிய முன்கூட்டியே ஒரு தொகை வழங்குமாறு கூறப்பட்டதாகவும், அதன்படி தமிழகம் முழுவதும் 8 கோடி முதல் 15 கோடி ரூபாய் வரை தொகைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இந்த தொகை தேர்தல் செலவுக்காக மீண்டும் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், பலருக்கு பாதி அளவிலேயே திரும்பியதாகவும், சிலருக்கு அதுவும் கிடைக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேள்வி எழுப்பியபோது, தேர்தல் ஆணையத்தின் நெருக்கடியை காரணமாகக் காட்டி, தற்காலிகமாக கடன் வாங்கி செலவு செய்யுமாறு கூறி பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என நம்பிக்கை அளித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தேர்தலில் 122 பேர் தோல்வியடைந்த நிலையில், இன்னும் பலருக்கு 50 லட்சம் முதல் 8 கோடி ரூபாய் வரை தொகை நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. உறவினர்களிடம் கேட்டால் மாவட்ட செயலர்களிடம் கொடுத்ததாகவும், மாவட்ட செயலர்கள் தங்களிடம் பணம் இல்லை என மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியிடமே நேரடியாக கேட்டு அழுத்தம் தரத் தொடங்கியுள்ளதாகவும், தொடர்ச்சியான பின்னடைவுகளுக்கிடையில் இந்த நிதி விவகாரம் கட்சியின் பெயருக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.