சென்னை: பத்திரப்பதிவு அடிப்படையில் தானாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் சேவை, கடந்த சில மாதங்களாக சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் சில தாலுகாக்களில் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாமதத்தை பயன்படுத்தி சில அதிகாரிகள் சட்டவிரோத வசூலுக்கு வழி செய்கிறார்கள் என்ற புகாரும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் வீடு அல்லது மனை வாங்குபவர்கள் பொதுவாக பட்டா பெயர் மாற்றத்துக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். ஒரு சர்வே எண்ணுக்குள் உள்ள முழுச் சொத்தையும் வாங்கும் பரிமாற்றங்களில் உட்பிரிவு சர்வே எண் உருவாக்கத் தேவையில்லை என்பதால், அந்த வகை பரிமாற்றங்களை எளிதாக்க 2019-ல் தானியங்கி பட்டா மாறுதல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் பத்திரப்பதிவு முடிந்த சில வாரங்களிலேயே ஆன்லைனில் பெயர் மாற்றப்பட்ட பட்டா கிடைக்கும் நிலை இருந்தது. ஆவணச் சரிபார்ப்பு சார் பதிவாளர் அலுவலகத்திலேயே முடிவதால், வருவாய் துறையின் நேரடி தலையீடு இல்லாமல் பட்டா மாறுதல் கிடைக்க வேண்டும் என்பதே திட்டத்தின் நோக்கமாகும்.

ஆனால் சமீபத்தில் விண்ணப்பித்தவர்கள் கூறுகையில், விற்பவர்–வாங்குபவர் ஆதார் விவரங்கள், பத்திர விவரங்கள், முந்தைய பட்டா உள்ளிட்டவை சார் பதிவாளர் நிலையில் சரிபார்க்கப்பட்ட பின்னரும் வருவாய் துறை அதிகாரிகள் தலையிட்டு நேரில் வருமாறு அழைப்பதாக தெரிவித்தனர். மேலும் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை கேட்பதாகவும், தவறான விண்ணப்பங்கள் மென்பொருள் மூலம் தானாக நிராகரிக்கப்படும் நிலையில் கூட தாலுகா அலுவலகத்தில் வேண்டுமென்றே தலையீடு நடக்கிறது என்றும் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர், தானியங்கி பட்டா மாறுதலில் தலையிடும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிகாரிகள் தலையீட்டைத் தடுக்க தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.