தமிழ் சினிமா நான்கு சுவர்களுக்குள் சுருங்கிக் கிடந்த காலத்தில், அதை கிராமங்களின் இயற்கை வெளிக்குள் கொண்டு வந்து புதிய பாதையை உருவாக்கியவராக பாரதிராஜா குறிப்பிடப்படுகிறார். கிராம வாழ்க்கையின் எதார்த்தம், மனித உறவுகளின் நெருக்கம் ஆகியவற்றை திரையில் நுணுக்கமாகக் காட்டி, தமிழ் திரைத்துறையில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியவர் என அவர் பாராட்டப்படுகிறார்.
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் 1941 ஜூலை 17-ஆம் தேதி பிறந்த இவரின் நிஜப் பெயர் சின்னசாமி. பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே முடித்தார். மாணவர் காலத்திலிருந்தே இலக்கியம், நாடகம் எழுதுதல், நடிப்பு, இயக்கம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். ஊர் சிரிக்கிறது, சும்மா ஒரு கதை போன்ற நாடகங்களை எழுதி மேடைகளிலும் அரங்கேற்றினார்.
சுகாதார ஆய்வாளராக பணியைத் தொடங்கிய அவர், சினிமா மீது கொண்ட ஈர்ப்பால் சென்னை வந்தார். சென்னையில் மேடை நாடகம் உள்ளிட்ட பணிகளிலும், பெட்ரோல் பங்க் வேலை போன்றவற்றிலும் இருந்தபடியே சினிமாவுக்குள் நுழைய முயன்றார். பின்னர் இயக்குநர் பி. புல்லையாவிடம் உதவியாளராகவும், கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் இணைந்தும் சினிமாவின் நுணுக்கங்களை கற்றார்.
16 வயதினிலே மூலம் இயக்குநராக அறிமுகமான பிறகு, தமிழக கிராமங்களையே படப்பிடிப்பு தளமாக மாற்றியவர் என்ற பெயரை பெற்றார். அதனைத் தொடர்ந்து முழுக்க கிராமப் பின்னணியில் உருவான கிழக்கே போகும் ரயில் வெற்றி பெற்றது. ‘கிராமக் கதைகள் மட்டுமே’ என்ற விமர்சனங்களுக்கு பதிலாக சிகப்பு ரோஜாக்கள் மூலம் வேறுபட்ட முயற்சியையும் அவர் காட்டினார்.
மண்வாசனை, புதுமைப்பெண், முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா, பசும்பொன், தாஜ்மகால், கடல் பூக்கள், ஈரநிலம் உள்ளிட்ட பல படங்களை அவர் இயக்கியுள்ளார்; தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களையும் இயக்கியுள்ளார். கல்லுக்குள் ஈரம் மூலம் நடிகராக அறிமுகமான அவர் பல படங்களில் நடித்ததுடன், மனோஜ் சினி கிரியேஷன்ஸ் மூலம் தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். குடும்ப வாழ்க்கையில் சந்திர லீலாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு மனோஜ், ஜனனி என இரண்டு பிள்ளைகள்; நடிகராக இருந்த மனோஜ் கடந்தாண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.





