மத்திய பிரதேச ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை நிராகரித்தது “சட்டவிரோதம்” என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
கட்சியின் சார்பில் அவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், குற்ற வழக்கு தொடர்பான விவரங்களை மறைத்ததாக கூறி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், டில்லியில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தது. இதில் கே.சி. வேணுகோபால் மற்றும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிங்வி கூறுகையில், குற்ற வழக்கு விவரங்களை மறைத்ததாக கூறுவது உண்மையல்ல என்றும், மீனாட்சி நடராஜன் மீது எந்த குற்றவழக்கும் நிலுவையில் இல்லை என்றும் தெரிவித்தார். வேட்புமனு நிராகரிப்பு வெளிப்படையான சட்ட மீறல் என்பதால், அந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.





