முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா, பிரதமர் நரேந்திர மோடியை “பரிவுணர்வு கொண்ட ஜனநாயகவாதி” என வர்ணித்து, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில் தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் பணியாற்றும் சாதனை இந்திய ஜனநாயகத்தின் வலிமையையும் பரிணாமத்தையும் வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
1952-ல் நடந்த முதல் பொதுத்தேர்தல் காலத்தில் அரசியல் சூழல் குறுகியதாக இருந்ததாகவும், அப்போது காங்கிரஸ் கட்சி ஏகபோக சக்தியாக இருந்ததாகவும் அவர் நினைவூட்டினார். இதற்கு மாறாக, 2014 மற்றும் 2024-ல் மோடி பொறுப்பேற்ற போது இந்தியா பரப்பளவு, பன்முகத்தன்மை, பொருளாதாரம் மற்றும் குடிமக்களின் விழிப்புணர்வு ஆகியவற்றில் பெரிதும் மாறியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்ததையும், அரசியல் போட்டி பலமடங்கு அதிகரித்ததையும் சுட்டிய தேவகவுடா, 2024 தேர்தலில் மோடி ஆயிரக்கணக்கான அரசியல் கட்சிகளின் சவால்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய மத்திய அமைச்சரவையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்டோரின் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க சமூக பன்முகத்தன்மையை காட்டுகிறது என்றும் கூறினார்.
பெண்களுக்கு பார்லிமென்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதிநிதித்துவம் கிடைக்க, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மோடி வெற்றிகரமாக நிறைவேற்றியதாகவும் அவர் பாராட்டினார். அரசியலமைப்பு உரிமைகள், பாலின சமத்துவம், குடிமை பொறுப்புகள் குறித்து இன்றைய வாக்காளர்கள் அதிக கல்வியறிவும் விழிப்புணர்வும் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்றைய காலத்தில் பிரதான ஊடகங்களின் விமர்சனங்களும் சமூக ஊடகங்களில் வரும் சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகளும் இடையறாது இருப்பதாக குறிப்பிட்ட தேவகவுடா, பொருளாதார வளர்ச்சி, மக்கள் நலக் கொள்கைகள், தேசிய பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்கள் உள்ளிட்டவற்றில் மோடியின் நிர்வாகத் திறன் வெளிப்படுகிறது என்றார். இறுதியில், அவர் நல்ல ஆரோக்கியமும் ஆற்றலும் பெற்று தொடர்ந்து பணியாற்ற இறைவன் அருள வேண்டும் என வாழ்த்தினார்.





