புதுடில்லி: எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியாவின் அணு ஆயுத நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 12 அணு ஆயுதங்கள் உடனடியாக பயன்படுத்தக்கூடிய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட அறிக்கையில், மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் உள்ளிட்ட சூழல்கள் மற்றும் பாகிஸ்தான், சீனா போன்ற அண்டை நாடுகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு கவலைகள் அதிகரித்திருப்பது இதற்கான பின்னணியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக அணு ஆயுதங்கள் மிகுந்த பாதுகாப்புடன் தனித்தனியாக சேமித்து வைக்கப்படும். ஆனால் இம்முறை, முதல் முறையாக 12 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளுடன் பொருத்தப்பட்ட நிலையில் ‘ஸ்டாண்ட்பை’யில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் கடந்த ஆண்டில் இந்தியாவின் அணு ஆயுத கையிருப்பு சற்றளவு உயர்ந்துள்ளதாகவும், நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைகளில் குறைந்த எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களை பொருத்தி ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் SIPRI கூறியுள்ளது.
‘முதலில் தாக்கக் கூடாது’ என்ற இந்தியாவின் கொள்கையில் மாற்றமில்லை என்றாலும், எதிரி தாக்குதலுக்கு மிக விரைவாக பதிலடி அளிக்கத் தயாராகும் நோக்கில் இந்த தயார் நிலை இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதுகுறித்து மத்திய அரசோ அல்லது பாதுகாப்பு அமைச்சகமோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடவில்லை.





