தமிழ்நாடு காவல்துறையின் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளதாக ஐஜி பவானீஸ்வரி தெரிவித்தார். அனைத்து மாவட்டங்களிலும் படைகள் பணிகளை ஆரம்பித்துள்ளன என்றார்.

தற்போது 70 படைகள் இயங்கத் தொடங்கியுள்ளன; மொத்தமாக 270 படைகள் வரை எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் கூறினார். சென்னையில் ஒவ்வொரு துணை கமிஷனரிடமும் இரண்டு படைகள் நியமிக்கப்பட்டுள்ளன; ஆவடி, தாம்பரத்தில் தலா நான்கு படைகள் உள்ளன.

தனித்துவமாக செயல்பட சிறப்பு கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சமூக வலைதளங்கள் காரணமாக பெண்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு, கடும் மன உளைச்சல் உருவாகும் நிலை இருப்பதாகக் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் நீதியளிக்கப்படும் என்றார்.

குற்றங்களைத் தடுப்பதே முதல் முன்னுரிமை; அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். 100, 112, 1091 ஆகிய தொலைபேசி எண்கள் இப்போது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக செயல்பாட்டில் உள்ளன.

மேலும் 49 ட்ரோன்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வாங்கி அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். குறிப்பாக இரவு நேரங்களில் செல்ல முடியாத பகுதிகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்; மப்டியிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.