பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்று, ஜூன் 16-17 தேதிகளில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில், மோடி ஜூன் 13-14 தேதிகளில் நைஸ் நகருக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு இரு தலைவர்களும் சந்தித்து, இருநாட்டு வர்த்தக உறவுகள் மற்றும் சர்வதேச அரங்கில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது, இந்தியா மற்றும் பிரான்ஸின் முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை இணைக்கும் முயற்சியாக “பாரத் இன்னோவேட்ஸ் (Bharat Innovates)” என்ற நிகழ்வை மோடியும் மேக்ரானும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.
மேலும், ஜூன் 14-16 தேதிகளில் பிரதமர் மோடி ஸ்லோவாக்கியாவுக்கும் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். ஸ்லோவாக்கியா சுதந்திரம் பெற்ற பிறகு அந்நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
மொத்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக வர்த்தகம், முதலீடு, ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறிப்பிடப்பட்டுள்ளது. ஜி7 மாநாட்டில் நாடுகளுக்கிடையேயான ஒற்றுமை, ஏஐ தொழில்நுட்பம், நிலையான பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல் போன்ற தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற உள்ளன.





