டெல்லியில் ஜூன் 11-ல் நடைபெறும் நிடி ஆயோக் கூட்டத்தில் தென்னிந்திய மாநிலங்களிலிருந்து புதிதாகப் பதவியேற்ற மூன்று முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டத்திற்கு முன்பே அரசியல் வட்டாரங்களில் இது பேசுபொருளாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள். மத்திய–மாநில உறவை வலுப்படுத்துவது மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் விஜய் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ளார். சமீபத்திய பயணத்தில் சந்திக்காத ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிடி ஆயோக் கூட்டத்தில் மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து அவர் வலியுறுத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கேரள முதல்வர் வி.டி. சதீசன் கூட்டத்தில் பங்கேற்று மாநில மக்களின் பிரச்னைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார் என கூறப்படுகிறது. கர்நாடக முதல்வர் சிவகுமார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை சந்திக்கவும், கட்சி தலைமையகத்தைப் பார்வையிடவும், மூத்த அதிகாரிகளுடன் ஆலோசிக்கவும் டெல்லி சென்றுள்ள நிலையில், நிடி ஆயோக் கூட்டத்திலும் அவர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.