மத்திய அரசு E85, E100 போன்ற அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலை ஊக்குவித்து வரும் நிலையில், நகர்ப்புற பெட்ரோல் நிலையங்களில் அவற்றை சேமித்து வைக்க தேவையான வசதிகள் போதவில்லை என்று பெட்ரோல் பங்க் டீலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பெரும்பாலான நகர்ப்புற நிலையங்கள் பெட்ரோல், டீசல் சேமிப்புக்கே வடிவமைக்கப்பட்டவை என அவர்கள் கூறுகின்றனர்.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான அன்னிய செலாவணியை குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசை தணிக்கவும் எத்தனால் கலப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பெட்ரோலில் 20% வரை எத்தனால் கலக்கப்படுகிறது; இது E20 என அழைக்கப்படுகிறது. இந்த எத்தனால் கரும்பு பாகு கழிவு மற்றும் சோளம், அரிசி, சேதமடைந்த தானியங்கள் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இப்போது எத்தனால் கலப்பை 85% வரை உயர்த்தும் திசையில் அரசு நகரும் நிலையில், அதற்கு ஏற்ற வாகனங்களை தயாரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஹீரோ நிறுவனம் E85-ல் இயங்கக்கூடிய பைக்குகளை அறிமுகம் செய்ததாகவும், மாருதி சுசூகி E85-க்கு ஏற்ற வேகன் ஆர் காரை அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் E85 பெட்ரோலுக்கான முதல் வினியோக நிலையம் சமீபத்தில் திறக்கப்பட்டது.

முதல் கட்டமாக 48 பெட்ரோல் நிலையங்களில் E85 வினியோகம் தொடங்கும் என்றும், 2027 நிதியாண்டுக்குள் அதை 5,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டில்லி, சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள நிலையங்களில் E85/E100க்கு பிரத்யேக சேமிப்பு வசதி, சிறப்பு குழாய்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படும் என டீலர்கள் கூறுகின்றனர்.

தற்போதுள்ள நிலையங்களை மேம்படுத்த அதிக முதலீடும் இட வசதியும் தேவைப்படுவதுடன், கூட்டம் நிறைந்த நகர்ப்புற பங்க்களில் பாதுகாப்பு சவால்கள், நீண்ட வரிசை காத்திருப்பு, பராமரிப்பு செலவுகள் மற்றும் செயல்பாட்டு சுமை அதிகரிப்பு போன்ற சிக்கல்கள் உருவாகலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.