புதுடில்லி: இந்தியாவின் நீண்டகால பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ள நிலையில், பல நாடுகளின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்ததுடன், சமீபத்தில் ரோம் நகரில் மோடியை சந்தித்ததை நினைவுகூர்ந்தார். இரு நாடுகளின் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் தொடங்கப்பட்ட திட்டங்கள் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

இலங்கை அதிபர் அனுரா குமர திசநாயகே, இந்திய வரலாற்றில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமராக நீண்டகாலம் பதவி வகிப்பவர் என்ற வகையில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். இலங்கை நெருங்கிய நட்புறவை மதிப்பதாகவும், இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த ஆர்வம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

டிரினிடாட்-டொபாக்கோ பிரதமர் கமலா பெர்சாத் பிசெஸர், மோடியின் தலைமையின் கீழ் உலக விவகாரங்களில் இந்தியா முன்னணியில் குரல் கொடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், 140 கோடி மக்கள் கொண்ட நாட்டை அவர் மூன்று பதவிக்காலங்களில் வழிநடத்தி வருவதாகவும் கூறினார்.

பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே, மோடி தமக்கு ஒரு ரோல் மாடல் என்றும், தலைமைக்கான சிறந்த உதாரணம் என்றும் கூறி வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார்.