தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயமாக போற்றப்பட்ட பாரதிராஜாவின் உடல், தேனி காட்ரோட்டில் உள்ள அவரது பண்ணைத் தோட்டத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக அரசு அறிவித்தபடி துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி நிகழ்வு நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் பிறந்த பாரதிராஜா, சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சென்னைக்கு சென்று பல்வேறு வேலைகளை செய்து வந்த நிலையில், 16 வயதினிலே மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஸ்டுடியோ மையமான படைப்புகளை வெளி உலகக் களங்களுக்கு கொண்டு வந்தவராகவும் அவர் குறிப்பிடப்படுகிறார்.
இயற்கையோடு பின்னிப் பிணைந்த கிராம வாழ்க்கையின் எதார்த்தம், மண்ணோடு வளர்ந்த மனித உறவுகளின் மகத்துவம் ஆகியவற்றை நெருக்கமாகச் சொல்லும் படைப்புகளால் அவர் தனித்த இடம் பெற்றார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியதுடன், பல படங்களில் நடித்தும் சிலவற்றை தயாரித்தும் உள்ளார்.
உடல்நலக் குறைவால் சென்னையில் அவர் மறைந்ததைத் தொடர்ந்து அங்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் தேனிக்கு கொண்டு வரப்பட்டபோது ஊர் மக்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர்; பல அரசியல் தலைவர்களும் கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினர்.
அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், வன்னியரசு ஆகியோர் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர். 16 வயதினிலே, மண்வாசனை, காதல் ஓவியம், கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல காலத்தால் அழியாத படைப்புகளை அவர் விட்டுச் சென்றுள்ளார்.





