புதுடில்லி: வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், பாரத் ஸ்டேஜ் 7 (பிஎஸ்-7) உமிழ்வு விதிமுறைகளுக்கான வரைவை நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு வெளியிடலாம் என்றும், 2030க்குள் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2020 முதல் பிஎஸ்-6 விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்குள் அடுத்த கட்டமான பிஎஸ்-7க்கு நகர அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் நடப்பாண்டில் அமலுக்கு வரவுள்ள ‘யூரோ 7’ விதிமுறைகளுக்கு இணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விதிமுறைகளின் கீழ் வாகன உமிழ்வுகளுக்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். அதோடு, நவீன உமிழ்வு கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உமிழ்வு கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை உற்பத்தியாளர்கள் வாகனங்களில் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகும்.

இந்த வரைவு நடப்பு நிதியாண்டுக்குள் முன்மொழியப்பட்டு, தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக வாகனத் துறைக்கு மூன்று ஆண்டு அவகாசம் வழங்கப்படலாம். ஆனால், சில வாகனத் துறை தரப்பினர் 2031ம் நிதியாண்டு வரை காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.