சிறார்களின் பாதுகாப்பை முன்னிட்டு, 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் கனடா அரசு புதிய மசோதாவை அறிமுகம் செய்துள்ளது.
இதுபோன்ற கட்டுப்பாடுகளை ஆஸ்திரேலியா, மலேஷியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே அமல்படுத்தியுள்ளன. பிரான்ஸ், டென்மார்க், போலந்து, பிரிட்டன் போன்ற நாடுகளும் இதேபோன்ற சட்டங்களை கொண்டு வர பரிசீலித்து வருகின்றன.
கனடாவில் அறிமுகமான இந்த மசோதா இன்னும் பார்லிமென்டில் நிறைவேற்றப்படவில்லை. அதே நேரத்தில், சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் கொள்கைகள் தங்களிடம் உள்ளன என்பதை தொழில்நுட்ப நிறுவனங்கள் நிரூபித்தால், தடையிலிருந்து விலக்கு அளிக்கும் ஏற்பாடும் இதில் இடம்பெற்றுள்ளது.
மசோதாவின் நோக்கம், சிறார்களின் அனுமதியின்றி எடுக்கப்படும் அந்தரங்கப் படங்கள் உள்ளிட்ட ஏழு வகையான தீங்குகளிலிருந்து அவர்களை பாதுகாப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, மென்பொருட்களின் ஒழுங்குமுறை மற்றும் இணையதளங்களில் உள்ள தீய உள்ளடக்கங்களை கட்டுப்படுத்துதல் தொடர்பாகவும் விரிவான விதிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய, புதிய சட்டத்தின் கீழ் ஒரு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





