சென்னை: மாநகராட்சிகள், நகராட்சிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் நகரமைப்பு திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் “நேர்மையாகவும், சுதந்திரமாகவும்” செயல்பட வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஆட்சிக்கு வந்த பிறகு, நகராட்சி நிர்வாகத் துறைக்கு தனி அமைச்சர் இல்லாமல், அந்தத் துறையை முதல்வர் நேரடியாக தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் துறையின் செயலர், மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள், நகரமைப்பு திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட பல பதவிகளில் மாற்றங்கள் செய்து புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்.

இந்தத் துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பேசிய முதல்வர், த.வெ.க. தரப்பில் எந்த அரசியல் தலையீடும் இருக்காது என்றும், அப்படி ஏதேனும் ஏற்பட்டால் துறை செயலர் வழியாக நேரடியாக தன்னிடம் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

அமைச்சர்கள் அல்லது ஆளும் கட்சியினருக்காக விதிகளை மீறி வளைந்து கொடுக்க வேண்டாம் என்றும், அதிகாரிகள் தவறு செய்தது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறுகையில், நகராட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளில் கமிஷன் பெறக்கூடியவர்கள் யார் யார் என்பதற்கான விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது என்றும், அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரைவில் பணியிட மாற்றங்கள் நடைபெறலாம் என்றும் தெரிவித்தனர்.