சமூக ஊடகங்களில் சட்டவிரோதமான அல்லது அவதூறான உள்ளடக்கம் பரவுவது தெரிய வந்தால், நீதிமன்ற உத்தரவை காத்திருக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; ‘பார்வையாளராக வேடிக்கை பார்க்க’ கூடாது என்று டில்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

டில்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது. டில்லியின் சாக்கேத் பகுதியில் கடந்த மாதம் கட்டடம் இடிந்து விழுந்து ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னர், டாக்டர் கபில் காக்கர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ இதற்கு காரணமாக அமைந்தது.

அந்த வீடியோவில் உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததுடன், ‘கொலையாளி’ எனவும், ஊழல் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்பு உள்ளதாகவும் ஆதாரமின்றி குற்றஞ்சாட்டியதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.

நீதிபதிகள் நீனா பன்சால் கிருஷ்ணா, மது ஜெயின் அமர்வு, சட்டவிரோத தகவல்கள் வெளியாவதை அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விரைவாக அவற்றை நீக்க வேண்டும் என்றும், அவதூறான மற்றும் அராஜக செயல்களில் ஈடுபடுவோர்மீது சட்டரீதியான நடவடிக்கை அவசியம் என்றும் தெரிவித்தது.

நீதிமன்ற உத்தரவுகள், தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை நியாயமான முறையில் விமர்சிக்க உரிமை இருப்பினும், எந்தச் சட்டப்பூர்வ ஆதாரமும் இன்றி நீதிபதிகள் மீது ஊழல் அல்லது குற்றப் பின்னணி போன்ற குற்றச்சாட்டுகளை கற்பிப்பது நியாயமான விமர்சனமாகாது என்றும் கூறப்பட்டது. இதனடிப்படையில், கபில் காக்கரின் கணக்குகளை முடக்கவும், அவதூறான கருத்துகளை முழுமையாக நீக்கவும் யூடியூப், எக்ஸ், மெட்டா, லிங்க்ட்இன் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.