திருப்பூர்: தேச பாதுகாப்பில் எந்த சமரசமும் கூடாது; மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய பயணியர் விமானங்களை குறிவைத்து பாகிஸ்தான் திட்டமிட்டதாக கூறப்படும் சதி வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பிட குழப்பத்தை ஏற்படுத்தி விபத்து நிகழ்த்த முயற்சி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,354 சிக்னல் குழப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதற்கு பாகிஸ்தான் அரசின் துணை இருப்பதாகத் தெரிய வந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

விமான சேவை வளர்ச்சி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதாரமாக இருப்பதால், அதை சீர்குலைக்கும் முயற்சிகளை தீவிர கண்காணிப்புடன் முறியடிக்க வேண்டும் என்றும், இந்த சதிகளுக்குப் பின்னால் இருப்பதாக கூறப்படும் பாகிஸ்தான் அரசை உலக அரங்கில் வெளிப்படுத்தி ஒடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், மத்திய–மாநில அரசுகள் மற்றும் புலனாய்வு துறைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், வந்தே பாரத் ரயில்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து வரும் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.