ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்ததற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால், கடந்த சில நாட்களாக மேற்கு ஆசியாவில் இந்திய மாலுமிகளைச் சுற்றி பல சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் கூறினார்.

தாக்குதல் நடந்ததையடுத்து இந்தியாவின் கண்டனத்தை பதிவு செய்ய அமெரிக்க அதிகாரிகளை வரவழைத்து தெரிவிக்கப்பட்டதாகவும், இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா உரிய முறையில் கவனத்தில் கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கப்பல் போக்குவரத்து மீது தொடர்ச்சியாக நடைபெறும் தாக்குதல்கள் மிகுந்த கவலை அளிப்பதாகக் கூறிய அவர், இத்தகைய தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், பிராந்தியத்தில் விரைவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை திரும்ப பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.