அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழு தயாரிக்கும் உளவுத்துறை அறிக்கை, வழக்கமாக உளவுத்துறை ஐ.ஜி. வழியாக முதல்வர் விஜய் பார்வைக்கு முதலில் செல்ல வேண்டும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், அந்த அறிக்கை முதல்வரின் மேஜைக்கு செல்லும் முன்பே, முதல்வரின் தனிப்பட்ட வியூக வகுப்பாளராக குறிப்பிடப்படும் ஜான் ஆரோக்கியசாமி அதை பார்வையிடுவதாகவும், இதனால் உளவுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் தலைமைச் செயலகத்திற்கு அடிக்கடி வந்து, சில தகவல்களுக்கு நேரடியாக உளவுத்துறை உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சீனியர் அமைச்சர் ஒருவரும், முதல்வரின் பாதுகாப்புப் பிரிவில் உள்ள உயர் அதிகாரியும், அந்த அறிக்கையை வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
சட்ட ரீதியாக, முதல்வர் அல்லது அரசு நியமித்த உதவியாளர் தவிர, உளவு அறிக்கையை வேறு யாரும் முன்கூட்டியே பார்க்கக் கூடாது என்றும், தற்போது வரை முதல்வருக்கு உதவியாளர் நியமிக்கப்படவில்லை என்றும் வட்டாரங்கள் கூறின. முதல்வர் பார்வைக்கு முன்பே பலர் அணுகுவது அரசின் ரகசியங்கள் கசியும் அபாயத்தை அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.





