கொல்கத்தா: திரிணமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் எம்.பியுமான அபிஷேக் பானர்ஜி மூத்த தலைவர்களை அவமதித்ததாகவும், கட்சியின் சீரழிவுக்கு அவரே காரணம் எனவும் திரிணமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

திரிணமுல் எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான கையெழுத்து மோசடி வழக்கில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் அபிஷேக் பானர்ஜிக்கு மூன்று வாரங்களுக்கு இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியது. அதே நேரத்தில், மேற்கு வங்க குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரணைக்கு இன்று மாலை 6 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த பின்னணியில், ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கல்யாண் பானர்ஜி, கடைசி நேரத்தில் தன்னை வழக்கறிஞர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறி அதை அவமானகரமான செயல் என குறிப்பிட்டார். நள்ளிரவில் வழக்கறிஞர் மாற்றம் குறித்து தகவல் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இனி அபிஷேக் சார்பில் ஆஜராகப் போவதில்லை என்றும், 45 ஆண்டுகளாக தொழிலில் இருப்பதாகவும் கூறிய அவர், இப்படியான “ஆணவமான” நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். மேலும், மம்தா பானர்ஜி ஒரு முடிவு எடுக்க வேண்டும்—“அபிஷேக்கை வைத்துக்கொண்டு எங்களை விடுங்கள், அல்லது எங்களை வைத்துக்கொண்டு அபிஷேக்கை நீக்குங்கள்” என அவர் கூறினார்.