உள்ளாட்சித் தேர்தலில் தவெக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது குறித்து ஜூன் 27 அன்று நடைபெறும் ம.தி.மு.க. பொதுக்குழுவில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதற்கான காரணங்களை அரசு கண்டறிந்து சரிசெய்ய வேண்டும் என்றார். மேலும் அரசு கேபிள் வலையமைப்பில் இருந்து மூன்று செய்தி சேனல்கள் நீக்கப்பட்டதை கண்டித்த அவர், இதுபோன்ற நடவடிக்கைகள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என கூறினார்.

ம.தி.மு.க. இன்னும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஒரு கட்சியில் இருந்து ராஜினாமா செய்து மற்றொரு கட்சியில் சேர்ந்து அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது துரதிருஷ்டவசமானது; அதைத்தான் மனவேதனை என கூறினேன், தி.மு.க. கூட்டணியில் இருந்தது தவறு என்று சொல்லவில்லை என்றும் விளக்கினார்.

முந்தைய ஆட்சிக்காலத்தில் இருந்த போதைப்பொருள் நடமாட்டம் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கிறது என குற்றம்சாட்டிய அவர், அரசு ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை உருவாக்கியதை வரவேற்றார்.