புதுடில்லி: அரசு நிர்ணயித்த விலை கட்டுப்பாட்டால் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி சில மருந்து நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியதைத் தொடர்ந்து, முக்கியமான இரண்டு கீமோதெரபி மருந்துகளின் விலை திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பல்வேறு வகை புற்றுநோய்களுக்கு வழங்கப்படும் கீமோதெரபி சிகிச்சையில் பொதுவாக கார்போபிளாட்டின், சிஸ்பிளாட்டின் ஆகிய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இம்மருந்துகளுக்கான மூலப்பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் கணிசமாக உயர்ந்ததால், வெளிநாட்டு நிறுவனங்களும் விலையை உயர்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இருப்பதால், இந்தியாவில் விற்பனை விலையை அரசு கட்டுப்படுத்தி வந்தது. தற்போதைய விலையில் விற்பனை தொடர்வது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை என நிறுவனங்கள் தெரிவித்ததால் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சில முன்னணி உற்பத்தி ஆலைகளில் தரக் கட்டுப்பாட்டு பிரச்னைகள் காரணமாகவும் உற்பத்தி தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானன.
இதையடுத்து உற்பத்திச் செலவு மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வை ஆய்வு செய்து, அனுமதிக்கப்பட வேண்டிய விலை உயர்வை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) தீர்மானிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பல நிறுவனங்களிடமிருந்து விலை உயர்வு கோரிக்கைகள் வந்ததாகவும், மூலப்பொருட்கள் விலை உயர்வு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் ரூபாயுடன் ஒப்பிடும் போது அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு ஆகியவை சிக்கலை தீவிரப்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடையற்ற வினியோகத்தை உறுதி செய்வதற்காக கார்போபிளாட்டின், சிஸ்பிளாட்டின் மற்றும் இரண்டு டிடி இம்யூனோகுளோபுலின் மருந்துகளின் விலையை திருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக NPPA அதிகாரிகள் கூறினர்.





